Tuesday, May 19, 2009


நாம் எதிர்பார்த்தது நடந்தேறிவிட்டது, ஆம் அப்பாவி தமிழனின் வாய்க்கரிசியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி புதிய ஆட்சி அமைக்க உள்ளது.ஆட்சியமைக்கும் முன்னரே ராஜபக்சேவின் ஊது குழலாக இருக்கும் பிரணாப்முகர்ஜி கூறியதாக இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் விடுத்த செய்தியில் ஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே தலைவன், வீர மறவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக தெரிவிக்கிறார்.இலங்கை தூதரோ 100 கோடி ரூபாய் வழங்கிய பாரத பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், சில கோடிகளை வழங்கிய தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.


இந்நிலையில் பிரபாகரன் இறந்தது உண்மை எனவும் 30 ஆண்டுகால விடுதலைப்புலிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்தது எனவும் இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகும், தமிழனின் சமாதியின் மேல் தனது மகனுக்கும் மற்றவர்களுக்கும் மத்திய மந்திரி என்ற மகுடம் சூட தில்லிக்கு செல்ல இருக்கும் தமிழின தலைவர், தன்மான சிங்கம், சொக்கத்தங்கம் சோனியாவிடம் தமிழகத்தை, தமிழினத்தை அடகு வைத்த அன்பு தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கருத்து ஏதும் சொல்லமாட்டாரம்.


ஏ தமிழின துரோகிகளே, கடந்த காலங்களில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரத் தமிழர்களின் ஆன்மாக்களிலும், ஆறரை கோடி தமிழக தமிழர்கள் மற்றும் லட்சோப லட்ச உலகத்தமிழர்களின் ஒவ்வொரு இரத்த அணுக்களிலும் கலந்து ஒன்றாகி விட்ட வேலுப்பிள்ளை பிரபாகரனை, தமிழர்களின் தலைவனை, தமிழினத்தின் வெற்றி வீரனை உங்களால் கொல்ல முடியாது. ஆனால் அங்கு கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களுக்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும். இன்று இலங்கையின் பொய் பிரச்சாரத்தை வெகு வேகமாக வெளியுலகிற்கு அறிவிக்கும் இந்திய அரசு நிச்சயம் ஒரு நாள் சர்வதேச சமூகத்தின் முன் கை கட்டி குற்றவாளியாக நிற்கப்போவது உண்மை.... உண்மை....உண்மை....

Monday, May 11, 2009

ஜெயிக்கப்போவது யாரு.....


15 வது மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் (13-5-2009) நடக்கவுள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 457 தொகுதிகளுக்கு நான்கு கட்டமாக வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39, பாண்டிச்சேரி 1, உ.பி யில் 14, மேற்குவங்கத்தில் 11, பஞ்சாபில் 9, இமாச்சல பிரதேசத்தில் 4, உத்தரகண்டில் 5, ஜம்மு காஷ்மீரில் 2, சண்டிகரில் 1 என மீதமுள்ள 86 தொகுதிகளுக்கு கடைசிக்கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடளுமன்ற தொகுதிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தா வின் புண்ணியத்தால் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. கடந்த ஏப்ரல் 17 ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மொத்தம் 1308 பேர் மனுத்தாக்கல் செய்தனர், இதில் 337 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட 107 பேர் மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 824 வேட்பாளர்களும், புதுவையில் 28 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக தென்சென்னை தொகுதியில் 44 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம்(தனி) தொகுதியில் 7 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

தி.மு.க.கூட்டணியில் காங்கிரஸ், வி.சி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும், அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., இடது சாரிகளுடனும், பா.ஜ.க. கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து போட்டியிடுகின்றன.தே.மு.தி.க., பகுஜன் சமாஜ், கொங்குநாடு முன்னேற்ற பேரவை போன்ற கட்சிகள் தனித்தும், புதிய தமிழகமும் மனிதநேய மக்கள் கட்சியும் இணைந்தும் களம் காண்கிறது.

அனைத்து நாடளுமன்ற தொகுதியிலும் தேர்தல் நடத்துவதற்குரிய இறுதிக் கட்டப்பணிகள் நடந்து வருகிறது. தேர்தல் அமைதியாக நடத்தத் தேவையான அணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, சுமார் ஒரு லட்சம் காவலர்களுடன் 97 கம்பெனி துணை ராணுவப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


பிரச்சாரம் ஓய்வடைந்த நிலையில் ஒன்றிய நகர கழகத்தினரும், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர்களும் கையில் மொய் கவருடன் அப்பாவி தமிழக வாக்காளர்களை வசியப்படுத்த தயாராகிவிட்டனர். மண் கவ்வப்போவது யாரு? மகுடம் சூடப்போவது யாரு? 16 ம் தேதி வரை காத்திருப்போம் .

Saturday, May 9, 2009

வலியுனுடே ஒரு பயணம்.....

கடந்த மார்ச் மாதத்தின் கடைசி வாரம் ஒரு காலைபொழுது தூங்கி எழுந்ததும் மார்பு நடுவில் ஒரு வலி, சாதாரண தசை பிடிப்பு அல்லது வாயு பகவானின் வேளையாக இருக்கும் என நினைத்து வலியை அலட்சியப்படுத்தி எனது தினசரி வேளைகளில் ஈடுபட முயன்ற வேளையில், வலி சிறிது சிறிதாக அதிகரித்து மார்பின் நடுவிலிருந்து எனது உடலின் அணைத்து பகுதிகளுக்கும் பயணிக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன் இது போன்ற வலியுடன் மருத்துவரிடம் சென்ற போது மாரடைப்பு வந்திருப்பதாகவும் உடனடியாக இருதய நோய் மருத்துவரை பார்க்க வேண்டும் என கூற, நான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு எனக்கு செய்த முதற்கட்ட பரிசோதனையில் எனது இருதயத்தின் இரண்டு வெசல்களில் அடைப்பு இருப்பதால் உடனடியாக ஆன்ஜியோபிலாஸ்ட் செய்து ஒரு வெசலில் ஸ்டண்ட் வைத்து சில லகரங்களை பெற்றுக்கொண்டு 15 நாட்கள் ஓய்வில் வைத்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.

அது போன்ற ஒரு நிலை மீண்டும் எற்பட்டுள்ளதோ, இது இரண்டாவது எபிசோடோ என்ற பயததில் மீண்டும் எனது படுக்கையில் சென்று படுத்தேன். வலி வலி வலி..... வலி வரும்போது நாவிற்க்கடியில் வைக்கும் மாத்திரையை வைத்து விட்டு வலியை பார்க்க, அதனுடனே சென்று அந்த வலியையும் வேதனையையும் அனுபவித்த வேளையில் என் மனைவியும், என் அம்மாவும் பதறி என் டாக்டர் நண்பருக்கு தகவல் சொல்ல அவர் வந்து பார்த்து விட்டு சில ஊசி மாத்திரைகளை கொடுத்து உடனடியாக நான் பார்த்து வரும் இருதய நோய் சிகிச்சை மருத்துவரை பார்க்கச்சொல்லி அறிவுறுத்தினார். அந்த மருத்துவரிடம் முன் அனுமதி பெற்று என் நண்பர் துணையுடன் அவரை பார்க்க, அவர் அவருடைய மருத்துவமனையில் சேர்த்து சில பரிசோதனைகள் செய்து, சிறிய அளவிலான மாற்றங்களை தவிர பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என்றும், சில புதிய மருந்துகளை கொடுத்து கண்டிப்பாக ஓய்வில் இருந்தாக வேண்டும் என்று கூறியதால் அதையே காரணமாக வைத்து என் வீட்டிலுள்ளவர்கள் என்னை ஒரு மண்டலம் வீட்டு சிறை போல வெளியில் செல்ல அனுமதிக்காமல் வைத்திருந்ததாலும், என் கணினியை பயன்படுத்த முடியாததாலும் என் மதிப்பிற்குரிய பதிவர்களின் பதிவுகளை பார்க்கமுடியாமல், தமிழக தேர்தல் களத்தின் தகிப்பை உணரமுடியாமல் போனது என் மார்பு வலியை விட அதிக வலியை கொடுத்தது.

.....ஐ.நா. மனித உரிமைகள் பிரிவின் ஹைகமிசனர் நவநீதம் பிள்ளையின் இந்திய வருகை, இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் சந்திப்பு, இலங்கையின் இனஅழிப்பு போரை கண்டித்து. "போர் நடைபெறும் பகுதிக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகளை அனுமதிக்க" வலியுறித்தியது.....

.....முத்துக்குமாரை தொடர்ந்து 13 பேர் உயிர் தியாகம் செய்தது.....

.....ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வை விரைவில் வழங்குவார் ராஜ பக்சே என கலைஞருக்கு பிரதமர் கடிதம் அனுப்பியது.....

.....சிவசங்கர் மேனன், நாராயணன் கொழும்பு சென்றது. அதன் பிறகு அங்கு நடந்த உக்கிரமான இன அழிப்புப்போர்.....

.....இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் போரை நடத்தி வரும் சோனியாவை தமிழகத்திற்குள் விடமாட்டோம் என்ற தமிழக திரைத்துறையினரின் போராட்டம். காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகளில் அவர்களை எதிர்த்து பிரச்சாரம்.....

....."காங்கிரசை அழிப்பதுதான் தனது முதல் வேலை" மருத்துவர் இராமதாஸ், வை.கோ. மற்றும் கம்யூனிச தலைவர்கள், ஜெயலலிதாவை விட்டு விலகி வந்தால், தனித்து நின்று காங்கிரசுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம் என சூளுரைத்த திருமா, காங்கிரசின் ஆதரவுடன் களம் காண்பது.....

.....இராமதாஸ், வை.கோ., கம்யூனிச தோழர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்களை விட ஒரு படி மேலே போய் ஓங்கி உரத்து குரல் கொடுக்கும் ஜெயலலிதா, தமது கூட்டணி வெற்றி பெற்றால் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு அமைக்கப்போவதாக கூறுவது.....

.....முத்துக்குமாரா? யார் அது ? என கேட்ட பெரியாரின் பேரன். உலக நாடுகளின் சட்டம் தெரியாமல் பேசும் ஜெயலலிதா என கூறும் காங்கிரஸ் தலைவர்கள். கையாலாகாத தங்கபாலு.....

.....திடீர் இட்லி திடீர் சட்னி என்பது போல திடீர் உண்ணாவிரதம் இருந்த கலைஞர், அதற்க்கு பயந்து நான்கு மணி நேரத்திற்குள் பணிந்த ராஜா பக்சே.....

.....கோவையில் பெரியார் தி.க.வினர் மற்றும் ம.தி.மு.க. வினரின் இந்திய ராணுவத்திற்கு எதிரான சிறிய போர், மானமுள்ள தமிழனின் உணர்ச்சிக் கொந்தளிப்பு.....

.....இப்படியெல்லாம் அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம். சுட்டெரிக்கும் வெயிலையும் மீறி பணத்தை கட்டவிழ்க்கும் கட்சிகள், மாறாத தமிழக அப்பாவி வாக்காளர்கள்.....

தொப்புள் கோடி உறவுகளின் ஜீவா மரண போராட்டத்தையும், இங்குள்ள அரசியல் தலைவர்களின் சித்து விளையாட்டுகளையும் கண்டு மனம் கொந்தளித்து நிலை தடுமாறாமல் இருக்கத்தான் இந்த ஒன்னரை மாத ஓய்வு எனககு. தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது, 91 இல் ராஜிவ் காந்தி படுகொலை, 2009 இல் ஈழத்தமிழர்கள் படுகொலை. தமிழக மக்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து தங்களுக்கு இருக்கும் பொறுப்பினை உணர்ந்து தமது வலிமையை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டிய தருணம் இது. தமிழினமே தகுந்த பாடம் புகட்டுங்கள். தவறானவர்களை விரட்டி அடியுங்கள்.

Thursday, March 26, 2009

பா.ம.க வின் புதிய கூட்டணி ....


இன்று சென்னையை அடுத்த வானகரத்தில் பா.ம.க வின் பொதுக்குழு கூடியது. மருத்துவர் இராமதாஸ், கட்சியின் தலைவர் கோ.க.மணி, மத்திய அமைச்சர்கள் அன்புமணி இராமதாஸ், வேலு மற்றும் சட்டமன்ற , நாடளுமன்ற உறுப்பினர்களுடன் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து பிரிந்த பா.ம.க.வை அணிக்குள் கொண்டுவர காங்கிரஸ் பலவழிகளிலும் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்த நிலையில் இன்றைய பொதுக்குழு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
2581 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக 2453 வாக்குகளும், தி.மு.க விற்கு ஆதரவாக 117 வாக்குகளும் பதிவாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ அ.தி.மு.க வுடன் கூட்டணி முடிவாகிவிட்ட நிலையில், கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட உள்ளார்.

குழப்பமில்லாத விஜயகாந்த் வேட்பாளர்கள்....


தே.மு.தி.க வின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று அதன் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். முதலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

1. மதுரை - ஆர்.எம்.முத்துலட்சுமி

2. திண்டுக்கல் - ப.முத்துவேல்ராஜ்

3. சேலம் - அழகாபுரம் மோகன்ராஜ்

4. நாமக்கல் - என்.மகேஸ்வரன்

5. கன்னியாகுமரி - எஸ். ஆஸ்டின்

6. திருச்சி - ஏ.எம்.ஜி. விஜயகுமார்

7. திருநெல்வேலி - எஸ்.மைக்கேல் ராயப்பன்

8. தேனீ - எம்.சி. சந்தானம்

9. விருதுநகர் - க.பாண்டியராஜன்

இன்று நாகர்கோவிலில் பிரச்சாரத்தை தொடங்க இருக்கும் கேப்டன் இன்றாவது கூட்டணி பற்றி அறிவிப்பாரா என அனைவரும் ஆவலுடன் எதிபார்த்திருக்கின்றனர்.

Monday, March 23, 2009

கண்ணப்பனின் தனித் தமிழ்நாடு ???



" ஈழத்தில் என்ன நடக்கிறது " என்ற தலைப்பில் கடந்த 21-10-2008 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வை.கோ அவர்கள் தலைமையில் நடந்த கருத்தரங்கில், ம.தி.மு.க. வின் அவைத்தலைவர் மு.கண்ணப்பன்,
" தமிழ்நாடு- தனிநாடு என்று சொல்லும் நாள் வரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடும் விரைவில் மலரும் " என்று பேசிய மு.கண்ணப்பன்,
" தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது " தொடர்பாகவும்,"புலிகள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவிப்பது " தொடர்பாகவும், சட்டப்பேரவையில் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டுவந்து, அந்தத் தீர்மானமும் ஏக மனதாக ஏற்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றால் ஆறரை கோடி தமிழர்களும் ஆதரிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? ஆனால் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை, தமிழக அரசும் மத்திய அரசை வலியுறுத்தவில்லை. இப்படித்தான் இருக்கிறது ஈழப்பிரச்னையில் கலைஞரின் நிலைப்பாடு என்று பேசிய மு.கண்ணப்பன்,
இலங்கை உள்விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறிக்கொண்டே, அந்த நாட்டுக்கு ஆயுத உதவியோடு நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கி வரும் மத்திய அரசு, நம் வரிப்பணத்தை கொண்டு நம் தமிழினத்தை அழிப்பதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று கூறிய மு.கண்ணப்பன்,
ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகார அரசு நடத்தும் இலங்கை அரசிடம் இருந்து தமிழ் இனத்தை மீட்கும் உரிமைப்போராட்டத்தில் புலிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். சொந்த நாட்டில் தமிழக மக்களையும், பிழைக்கச் சென்ற இடத்தில் தமிழ் இனத்தையும் சீண்டும் நிலை தொடர்கிறது, இதையெல்லாம் பொருத்துகொண்டிருக்க முடியாத வருங்கால தமிழ் சந்ததியினர் தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ள தயாராகி விட்டால் தனித் தமிழ்நாடு நிச்சயம் மலரும் என்று சொன்ன மு. கண்ணப்பன்,
எங்கள் மீது பிரிவினைவாதத்தை தூண்டியதாகவும், சட்ட விரோதமாக கூடியதாகவும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள், ஈழப்பிரச்சினையில் ஒருமித்த கருத்து உருவாகி வரும் நிலையில், மத்திய அரசை திருப்திப்படுத்தவும், தங்களது அரசைக் காப்பாற்றிகொள்ளவும் எங்களை கைது செய்திருக்கிறது கலைஞர் அரசு என்று பேசிய மு.கண்ணப்பன்,
இன்று கலைஞர் முன்னிலையில், ம.தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் தி.கே. சுப்ரமணியுடன் தி.மு.க. வில் இணைந்தார். கோவணம் பறிபோவது தெரியாமல் தோளில் கிடக்கும் துண்டை பெருமையாக நினைக்கும் இளிச்சவாய் தமிழர்கள் இருக்கும் வரை இது போன்ற அரசியல்வாதிகளின் அரசியல் பிரவேசம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

Saturday, March 21, 2009

பரிவு காட்டும் உலகநாடுகளும், பகைக்கும் இந்தியாவும்....

இனப்படுகொலையும், வன்முறை வெறியாட்டங்களும் பெருமளவு நடக்கும் காங்கோ, ஆப்கானிஸ்தான், ஈராக், மியான்மர், பாகிஸ்தான், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளுக்கு தலைமையேற்கும் தகுதியினை இலங்கை பெற்றுள்ளது. உடனடி ஆபத்துக்கள் நிறைந்த இந்த எட்டு நாடுகள் காலித்தனத்தை கட்டவிழ்த்து விட்டு அனைத்துலகின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளன. இவைகளில் சிங்களப் பேரினவாத அரசின் கொடுமைகளுக்கு அளவே இல்லை. இந்த ஆண்டில் மட்டும் இதுநாள் வரை 800 க்கும் அதிகமான ஈழத்தமிழ் மக்கள் குண்டு வீசி கொல்லப்பட்டிருக்கிறார்கள். சாலை ஓரங்களிலும், மன்மேடுகளிலும் தமிழனின் சடலங்கள் பரிதாபமாக சிதறிக்கிடக்கின்றன. மருத்துவமனைகளில், குடியிருப்புப் பகுதிகளில், போர் நிறுத்தப்பகுதி என அறிவித்த இடங்களில் வரைமுறையின்றி சிங்கள இராணுவம் பீரங்கித் தாக்குதலையும், எறிகணை தாக்குதலையும் ஏவிவிட்டு தமிழினத்தை பூண்டோடு அழித்து வருகிறது. வீடு இழந்து, உடமை இழந்து, பசிக்கு உணவின்றி, காயத்திற்கு மருந்தின்றி நடைபிணங்களாய் கண்ணீரும் கம்பலையுமாய் வேதனையின் விளிம்பில் நம் சொந்தங்கள் காடுகளில் வசிக்கிறார்கள். தமிழீழ மக்களின் மரண ஓலமும், கொந்தளிக்கும் மனக்குமுறலும், சர்வதேச சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிவிட்டது.
இங்கிலாந்து தலைநகர் இலண்டன் மாநகரில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான தமிழர்கள் மில்பேங்க் என்ற இடத்தில் இருந்து பாரளுமன்றம் வழியாக டெம்பிள் பிளேஸ் என்னும் இடம் வரை பேரணியாக அணி வகுத்து தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டி முழக்கமிட்டனர். இனப்படுகொலைக்கான கண்டனத்தையும் போரை நிறுத்தவேண்டியும் அனைவரும் கையொப்பமிட்டு, அந்நாட்டு பிரதமர் கார்டன் பிரவுனுக்கு மனு கொடுத்து மன்றாடி கேட்டனர்.

கனடாவின் டொராண்டோ, ஒட்டாவா, மாண்ட்ரியல், வான்கோவா ஆகிய நகரங்களில் 50 ஆயிரத்திற்கும் மேலான தமிழர்கள் 15 கி.மீ. தொலைவுக்கு மனித சங்கிலியாக கைகோர்த்து போரை நிறுத்து, பேச்சை தொடங்கு என ஆர்பரித்து நின்றார்கள். கனடா வாழ் தமிழர்களின் மன வலிமையை புரிந்து கொண்டதாகவும், உணர்வுகளை மதிப்பதாகவும் இது குறித்து அமைச்சரவையில் விவாதித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று அந்நாட்டு அமைச்சர் நடாளுமன்றத்திலேயே உறுதியளித்தார்.

பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிசில் எக்கோல் மிலித்தர் என்ற இடத்தில் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள முக்கியமான பகுதியில் ஐம்பதாயிரம் தமிழர்கள் கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடத்தி இனப்படுகொலையை நிறுத்துக என விண்ணதிர முழங்கினார்கள். சமூக ஆர்வலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற பிரமுகர்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள் என பலரும் இணைந்து ஈழத்தமிழர்களுக்காக பரிந்து பேசிய இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன்வோன்கோக் அவர்களும் ஆதரித்து உரையாற்றினார்.

ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஐ.நா. அலுவலகம் நோக்கி, தமிழர் பேரவையின் சார்பில் தமிழர்கள் ஒருங்கிணைந்து அழிவிலும் எழுவோம் என்ற குறியீட்டு பெயருடன் பேரணி நடத்தினார்கள். இலங்கையின் விடுதலை நாளான பிப்ரவரி 4 ஆம் தேதியை தமிழர் வாழ்வின் துயர நாளாக பிரகடனம் செய்த அவர்கள், சிங்களக்கொடியை எரித்தும் போர் நிறுத்தத்தை வலியுறித்தியும் ஆவேசமாக குரல் எழுப்பினார்கள். 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டு வந்து மனித நேயம் காக்க களத்தில் நின்றதை அந்நாட்டு ஊடகங்கள் வியந்து நின்றன.

தென்னாபிரிக்காவில் டர்பன் நகரில், தமிழர் கூட்டமைப்பு, இஸ்லாமிய ஒன்றியம், தேசிய காங்கிரஸ், கம்யுனிஸ்ட் கட்சி, சிறுபான்மை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்திய வம்சாவளியினர் முவாயிரம் மக்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சகத்திடம் கண்டன மனுவை ஒப்படைத்து தமது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினர்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் நிலை குறித்து 90 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது. வெளியுறவு, காமன்வெல்த் அலுவல் துறை அமைச்சர் பில்ரம்மெல், இலங்கை பிரச்சினை மிகவும் அதிர்ச்சியை நமக்கு அளிக்கிறது. அங்கு நிலவும் மனித உரிமை மீறல் குறித்து கவலை கொள்கிறோம். மனித உரிமை நிலைகள் மிகவும் சீர்குலைந்துவிட்டன. பெண்களும், குழந்தைகளும், ஏதுமறியா மக்களும் அங்கு கொல்லப்படுகிறார்கள். இவை அனைத்தும் அனைத்து நாடுகளின் மனிதாபிமான சட்டத்திற்கு புறம்பானவை. இலங்கை அரசின் மருத்துவமனைகளின் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் எந்த முயற்சியும் நம்மால் ஒப்புக்கொள்ள முடியாதவை. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என கவலையுடன் உரையாற்றினார்.

ஜெரமிகார்பன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை அரசு போரை நிறுத்திட முன்வரவில்லை என்றால், காமன்வெல்த் அமைப்பில் இருந்து அதனை நீக்க வேண்டும். ராணுவ வணிக ஒப்பந்தங்களிலிருந்து துண்டிக்க வேண்டும் என்று ஆவேசம் பொங்கிட உரையாற்றினார்.

தென் ஆப்பிரிக்காவில் ஆம்ஸ்டர்டாம் நகரில் கடந்த பிப்ரவரி 21 முதல் 25 வரை ஐந்து கண்டங்களிலிருந்து 50 கட்சிகள் அடங்கிய " போர்ட் இன்டர்நேஷனல் " என்ற உழைப்பாளர்களின் பன்னாட்டு அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. மெக்சிகோ, ஜப்பான் , ஜெர்மனி , இங்கிலாந்து , இத்தாலி , தென் ஆப்பிரிக்கா , பிலிப்பைன்ஸ் , பிரேசில் , போர்ச்சுகல் , கிரீஸ் , அல்ஜீரியா , டென்மார்க் ஆகிய நாடுகளின் போராளிகள் ஒன்றுகூடி இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தி , தமிழர்கள் வாழும் பகுதியில் தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய அரசை அமைக்க பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும் என்று அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது .

கத்தோலிக்க கிறித்துவ மதத்தலைவர் போப்பாண்டவரும், வாடிகன் நகரில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது மோசமடைந்து வரும் மனித அவலங்களையும், கொல்லப்படும் மனிதர்களின் எண்ணிக்கையும் பார்த்து போரை நிறுத்தி சமாதானத்தை உருவாக்க முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் .

இலங்கையில் நடக்கும் மோதல்கள் மீதும், வேதனையில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் பேரிடர் குறித்தும் உலகின் கவனம் திரும்பவேண்டும் என்றும் முன்னாள் மனித நேய உதவி அலுவலர்களுக்கான ஐ.நா. பொதுச்செயலாளரும், நெருக்கடிக்கால இடர் நீக்க உதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளருமான ஜேன் ரிஜிலான்ட் அவர்கள் நார்வே நாட்டிலிருந்து கேட்டுககொண்டார். அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கோரிக்கைகளை முன்வைத்து அமைதியை நிலைநாட்ட ஆவன செய்து வருகிறார்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கான சிறப்புத் தூதரை அனுப்பிவைப்பதாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் அறிவிக்கிறார். நாம் மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும் கடந்த பத்து நாட்களில் நடைபெற்றன. உலகமே கலங்கித் தவித்த வேளையில் நம் பாரதத்திரு நாடு சிங்களவனின் பங்காளியாய் நின்று நமக்கு பகையாளியாய்ப் படை நடத்திவருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் மனித உரிமை மீறலை விசாரிக்கவும் விவாதிக்கவும் வலியுறுத்தி சுவிட்சர்லாந்து, நியுசிலாந்து ஆகிய நாடுகள் தீர்மானங்களை கொண்டு வந்தபோது, இலங்கையுடன் இணைந்து இந்தியாவும் விவாதிக்கக்கூடாது என சண்டித்தனம் செய்து ஜனநாயகக் குரல்வளையை நெரிததுக்கொன்றது. தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய போர்நிறுத்த தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்த டெல்லி அரசு, என்.என்.ஜா., கே.பி.எஸ்.மேனன் ஆகிய அதிகாரிகளையும், காங்கிரசின் வெளியுறவு பிரிவு இணைச்செயலாளர் ஆகியோரையும் கொழும்புக்கு அனுப்பி போரை தொடரச் சொல்கிறது. தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகள் கூறுவதை இந்தியா ஒருபோதும் காதில் வாங்காது என்று இலங்கையின் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா திமிருடன் பேசியது காங்கிரசின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை.

விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய இந்தியா அரசு, தமிழீழ விடுதலைப்போரை நசுக்குவதற்காக, சிங்களக் காடையர்களுக்கு ஆயுதங்களையும், ஆள்களையும், பணத்தையும், தொழில்நுட்ப பொறியாளர்கள் உதவியையும் வாரி வழங்குகிறது. கிளிநொச்சியை, ஆனையிறவை, முல்லைத்தீவை வலுக்கட்டாயமாக பறித்து பஞ்சைகளாய், பராரிகளாய் தவித்து நிற்கும் தமிழீழ மக்களை கொன்றழிக்கும் சிங்களரின் கொலை பாதகச் செயலுக்கு இந்தியக் காங்கிரஸ் அரசு துணை போகிறது.

இந்திய வானூர்திகள், வானூர்தி ஓட்டுனர்கள், போர்ப்படைத் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள், பிரதமர் மன்மோகன் சிங், அயலுறவுச் செயலாளர் சிவசங்கரமேனன் அனைவரும் ஓன்று சேர்ந்து சிங்களவரோடு தாக்குவதால் சாவை எதிர்பார்த்து தமிழீழ மக்கள் நடைபிணமாய் உலவுகிறார்கள். குண்டடிபட்டு கைகால் சிதைந்து, மருத்துவம் இன்றி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அனாதைகளாய் அல்லல்படுகிறார்கள்.

பச்சிளம் பாலகர்களும், முதியோர்களும் கொள்ளப்படவதை, தமிழ்ப்பெண்கள் கூட்டம் கூட்டமாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்படும் கொடுமையை உலக நாடுகள் எல்லாம் கண்டிக்கின்றன. ஆனால் இந்தியா, ஒருவார்த்தை கூட பேச மறுக்கிறது. போர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது எனவே புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று ராஜபக்சேயின் அடியாளைப்போல வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜி தமிழர் நெஞ்சில் ஈட்டி கொண்டு தாக்குகிறார். வஞ்சகமும் துரோகமும் இணைந்த இச்சதிக்கு கருணாநிதியின் தமிழக அரசும் கமுக்கமாக ஒப்புதல் தருகிறது.

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டு சதிக்கு எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். நீதி வழங்குவார்கள் என்பது உறுதி! உறுதி !


நன்றி - தடயம் ( 16 - 31 ) இதழ் .



Friday, March 20, 2009

கலைஞருக்கு முழு வெற்றி ....


தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், ஓட்டுக்கட்சிகள் கூட்டணி வேட்டையில் ஜரூராக இருக்க, அரசியல் கட்சிகளால் நீர்த்துப்போன ஈழப்போராட்டத்தை, உணர்வுப்பூர்வமாக மக்கள் மத்தியில் எடுத்துச் சென்ற வழக்கறிஞர் சமூகத்தை திசை திருப்ப காங்கிரசின் ஊதுகுழல் கலைஞரின் நாடகம், சென்னை உயர்நீதி மன்றத்தில் அரங்கேறி அவர்கள் எதிர்பார்த்த வெற்றியும் பெற்றது. இதனையடுத்து வழக்கறிஞர்களின் போராட்டம் திசைமாறி, ஈழதமிழர் போராட்டத்தில் இருந்து வெகு தூரம் விலகி வந்து, தங்களின் உடமைகளுக்கும், உரிமைக்கும் போராடி ஒரு இடைக்கால வெற்றியை பெற்றுருக்கின்றனர்.




இதில் கலைஞருக்கும் அவருடைய கூட்டணிக்குமே முழு வெற்றி என்பது சொல்லத்தான் வேண்டுமா? இருப்பினும் வழக்கறிஞர் சமூகத்தின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துரைக்க வைத்த கலைஞருக்கு நன்றியை தெரிவியுங்கள்.
காவல்துறை, ஆளும் கட்சிக்கு ஏவல் செய்யப் பணிக்கப்பட்டவர்களாகவே கருதப்பட்டு வருகிறது. அவர்களுக்கென அதிகாரபூர்வமாக சங்கமோ, தனி அமைப்போ கிடையாது. இருந்தும் ஒரு சில காவலர்களின், காவல் துறை அதிகாரிகளின் முயற்சியால் சங்கம் தொடங்கப்பட்டு - எங்கே சங்கம் முழுமையாக செயல்படத்தொடங்கினால் தங்களுக்கு கிடைத்த அடிமைகள், அவர்களின் உரிமைகளுக்காக போராட தொடங்கி விடுவார்களோ, தமக்கும், தமது சொத்துக்களுக்கும், தமது அரசுக்கு கிடைக்கும் பாதுகாப்பும், மற்றும் அரசியல் எதிரிகளை மிரட்டவும், பழிவாங்கவும் பயன்படுத்தப்படுவது இயலாததாகி விடுமோ என ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் பயந்து - அது இன்றளவும் மறைமுகமாக செயல் பட்டு வருவது தெரிந்ததே.


லஞ்சம் வாங்குவதிலாகட்டும், பொதுமக்களை அவமானப்படுத்தி அலைக்கழிப்பதிலாகட்டும், காவல்துறையை விட "வருவாய்" தரக்கூடிய துறைகள் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. காவல்துறை அவசரப்பணிகளின் கீழ், எந்நேரமும், எப்போது வேண்டுமானாலும் அழைக்கப்படலாம். காலநேரம் பாராது, இரவு பகல் பாராது, பனி வெயில் மழை என எந்நேரமும் இவர்களுக்கு அழைப்பு காத்துக்கொண்டிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை .


காவலர்கள் தங்கள் மேலதிகாரிகளின் வீட்டில் எடுபிடிகளாக வேலை செய்வது, அரசியல்வாதிகளுக்கு அடியாளாக சேவகம் புரிவது போன்ற கலாச்சாரம் இன்றளவும் தொடர்வதை மறுக்க முடியுமா.


வழக்கறிஞர்களின் நிலை அப்படியா உள்ளது ? அவர்களுக்கென குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றம் வரையிலும், ஏன் தேசிய அளவிலும் சங்கம் உள்ளது. அவர்களுக்குள்ள வானளாவிய அதிகாரத்தை நடைமுறைப்படுத்த தடையேதுமில்லை என்பதே உண்மை நிலை.




காவல்துறையும் நீதித்துறையும் சமூகத்தின் இரு கண்கள் அல்லவா. ஒரு கண்ணை நோய் தாக்கினாலோ அல்லது இழந்தாலோ அது சமூகத்தின் ஊனம்தானே ? காவல்துறையை சார்ந்தவர்களின் குடும்பத்திலோ, உறவுகளிலோ வழக்கறிஞர்கள் இல்லையா ? வழக்கறிஞர் குடும்பத்தில் காவல்துறையினர் இல்லையா ? ஒருவருக்கொருவர் மதித்து,விட்டுக்கொடுத்து போனால் இதுபோன்ற வன்முறைகளை தடுக்க இயலுமே.



மக்கள் மாண்புற .... மனிதநேயம் காப்போம் ....



Wednesday, March 18, 2009

வழக்கறிஞர்களுக்கு வெற்றி ! காவல்துறைக்கு ????




கடந்த பல நாட்களாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்களின் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது . உயர்நீதி மன்றம், இன்று பிறப்பித்த உத்தரவில், தடியடி நடத்திய போலீசார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடுதல் ஆணையர் விஸ்வநாதன் , இணை ஆணையர் சுப்பிரமணியன் , இருவரையும் பணி இடை நீக்கம் செய்யப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது


வழக்கறிஞர்கள் நாளை சென்னையில் பேரணி நடத்த உள்ள நிலையில், இந்த உத்தரவு அவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளனர். நாளைய பேரணி, வெற்றிப் பேரணியாக நடக்கும், வேலை நிறுத்தம் பற்றி நாளை வழக்கறிஞர்கள் சங்கம் கூடி முடிவு எடுப்பார்கள் என கூறியுள்ளனர்.


வழக்கறிஞர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ள உயர்நீதி மன்றம், இந்த கொலை வெறி தாக்குதல் வழக்கில் யாரையும் பணிஇடை நீக்கம் செய்யக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதா என சட்ட வல்லுனர்கள்தான் தெரிவிக்கவேண்டும்.


Tuesday, March 17, 2009

மன்மோகனுக்கு மவுசு....



அரசியல்வாதிகள் நம் மக்களை வைத்து சூதாடிக் கொண்டிருக்கையில் , நம் இந்திய நாட்டின் பணக்கார வர்க்கம் அரசியல்வாதிகளை வைத்து சூதாட்டம் நடத்துவது "சூதாடி கையை வெட்டிப் போட்டாலும் துடுப்பைக் கட்டி சூது ஆடுவான் " என்ற முதுமொழியை நினைவு படுத்துகிறது இன்றைய (17-03-2009) தினமலரில் வந்த செய்தி .




கிரிகெட்டில் ஆரம்பித்த "பெட்டிங்" சூதாட்டம் இப்போது நாடளுமன்ற தேர்தலை ஒட்டி களை கட்ட ஆரம்பித்துவிட்டது . மன்மோகன் சிங் தான் மீண்டும் பிரதமராக வருவார் என்ற "பெட்டிங் " தான் இப்போது அதிக மவுசு பெற்றுள்ளது .

பிரதமராக வரும் வாய்ப்புள்ளவர்கள் என்று நான்கு பேர்களின் பெயர்கள் "பெட்டிங்கில்" பரபரப்பாக அடிபடுகின்றன, இதில் மன்மோகன் சிங்குக்கு தான்அதிக லாபம் தரக்கூடிய வகையில் பெட்டிங் கட்டப்பட்டு வருகிறது.

மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக வருவார் என ஒரு ரூபாய் கட்டினால் இரண்டரை ரூபாய் கிடைக்கும். பா.ஜ.க வின் அத்வானிக்கு ஒரு ரூபாய் ஐம்பது பைசா, சரத் பவாருக்கு ஒரு ரூபாய் எண்பது பைசா, மாயாவதிக்கு ஒன்றேகால் ரூபாயும் கிடைக்கும். சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்களால் விளையாடப்படும் இந்த சூதாட்டத்திற்கு அனுமதி இல்லை. இன்டர்நெட் வளர்ச்சி மிகுந்த இந்த கம்ப்யூட்டர் காலத்தில், இந்த சூதாட்டத்தை தடுக்க முடியவில்லை.


எல்லா பரிவர்த்தனைகளும் இன்டர்நெட் மூலம் நடப்பதால், சர்வதேச அளவில் ஓசைப்படாமல் பல ஆயிரம் கோடி கை மாறுகிறது. கிரிகெட்டில் ஆரம்பித்த இந்த சூதாட்டம் மும்பைக்கலவரம் போன்ற சம்பவங்களை வைத்தும் ஆடப்பட்டது. மும்பையில் இத்தனை நாள் தாக்குதல் நடக்கும், அதிரடிப்படை வெற்றி பெரும் என்று கூட பெட்டிங் கட்டப்பட்டது. இப்போது நாடளுமன்ற தேர்தலை ஒட்டி, அரசியல் பெட்டிங் தலை தூக்கியுள்ளது. அதிக அளவில் மும்பையில்தான் பெட்டிங்கில் பணம் கட்டுகின்றனர்.

இந்த சூதாட்டத்தை நடத்தும் " புக்கிகள் " இன்டர்நெட் வழியாக
இந்த பணத்தை பெற்று, தங்களது பெட்டிங் வர்த்தகத்தை நடத்துகின்றனர் . பணபலம் படைத்த இவர்களின் பெட்டிங் வர்த்தகத்தை போலீசாரால் தடுக்க முடியவில்லை , இன்டர்நெட் வழியாக நடப்பதால் தடுப்பது இயலாத காரியமாக உள்ளது . வரும் நாடளுமன்ற தேர்தலுக்குள் பல ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க 120 இடங்களைப் பெறும் என்று பெட்டிங் கட்டினால், ஒரு ரூபாய்க்கு 1.10 கிடைக்கும், அதுபோல காங்கிரஸ் 150 இடம் பெறும் என்று கட்டினால் ரூபாய் 1.20 ம் கிடைக்கும்

பகுஜன் சமாஜ் கட்சி 40 இடங்களை பிடிக்கும் என்றுதான் அதிகம் பேர் பெட்டிங் கட்டியுள்ளனர், இதில் ஒரு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் லாபம் கிடைக்கும். பெரும் பணக்காரர்கள் பல லட்சம் ரூபாயை , இப்போதே பெட்டிங்கில் கட்டியுள்ளனர்.

எந்த மாநிலத்தில் எந்த கட்சிக்கு அதிகம் சீட் கிடைக்கும், எந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவர், முக்கிய தலைகள் தேறுமா ? இல்லையா ? என்றெல்லாம் பெட்டிங் கட்டுவது ஆரம்பித்து விட்டது, இதனால் "புக்கிகள்" சுறுசுறுப்பாகி விட்டனர்.

நன்றி தினமலர் .

அழிந்த நந்தவனத்தில் ஆடுகள் மேய்ந்தால் என்ன ?

கழுதை மேய்ந்தால் என்ன ?



Monday, March 16, 2009

கனிக்காக காத்திருக்கும் கலைஞர்....

தமிழக முதல்வரை சந்தித்த பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு திருமா அளித்த பேட்டியில், தி.மு.க வும் வி.சி யும் தேர்தல் கூட்டணி என்ற அளவில் மட்டுமல்லாது, சாதி ஒழிப்பு, சமத்துவம், ஈழம் போன்ற கொள்கை அளவில் உடன்படும் கட்சி என கலைஞர் கூறியதாக தெரிவித்தவர், மேலும் வி.சி யும், பா.ம.வும் ஒரே கூட்டணியில் தொடரும் என மருத்துவர் இராமதாஸ் கூறியதை நினைவுபடுத்தி தாம் நம்பிக்கையோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


இது ஒருபுறம் இருக்க காங்கிரஸின் தமிழக தலைவர் தங்கபாலு, பா.ம.க, மத்தியில் தங்கள் கூட்டணியில் இருப்பதால், தமிழகத்திலும் அது தொடரும் என கூறியுள்ளார். மாங்கனிக்காக, ம.தி.மு. மற்றும் இடதுசாரிகள் தங்களின் அ.தி.மு. கூட்டணியில் வருவதற்கு காத்துக்கொண்டிருக்கும் வேளையில், கலைஞர் , தங்கபாலு , திருமா வின் அறிவிப்புகளை தொடர்ந்தாவது மருத்துவர் இராமதாஸ் மௌனம் களைவாறா?




மாங்கனி யாருக்கு ?


Thursday, March 12, 2009

தேசிய பாதுகாப்பு சட்டமா? கூட்டணி பாதுகாப்பு சட்டமா?




திண்டுக்கல் நகரில் கடந்த 2 ம் தேதி, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்க்காக பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறது தமிழக காவல் துறை. இதர்க்கு இவர்கள் சொல்லும் காரணம், கொளத்தூர் மணி இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகவும் பேசியது, ராஜிவ் கொலையை விமரிசித்தது.
இயக்குனர் சீமானை தொடர்ந்து கொளத்தூர் மணி கைது செய்யப்பட்ட நிலையில், மார்ச் 1 ம் தேதி திருப்பூரில் "நாதியற்றவனா ஈழத்தமிழன்" என்ற தலைப்பில் பேசிய ம.தி.மு.க வின் கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத்தும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்படி இவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவர்களை எல்லாம் கைது செய்து வரும் நேரத்தில், ஈழத்தமிழர்களுக்காக இவர் எழுதிய கவிதைகளும், இவர் பேசியவையும் நினைவில் வருகிறது.
சோனியாவை விமரிசிப்பவர்களுக்கு தங்கள் கூட்டணியில் இடமில்லை என கூறி வரும் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஈழத்தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரிக்க போவதாகவும், அதனை செஞ்சுலுவை சங்கம் மூலம் இலங்கைக்கு அனுப்ப போவதாகவும் கூறியுள்ளார், இதனைப்பற்றி, கொட்டாவி விடுவதற்க்காக கூட வாய் திறக்காத தமிழின தலைவர் கலைஞர் அவர்கள், செல்வி ஜெயலலிதாவின் புதிய பரிமாண வளர்ச்சியாக ஈழத்தமிழர் பிரச்சினையை கையிலெடுத்து, உண்ணாவிரத போராட்டம் முதல் உண்டியல் குலுக்கியது வரை, பத்தி பத்தியாக விமரிசித்தது மட்டுமின்றி இவர்கள் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் இவற்றை அனுப்ப முடியாது என கூறியுள்ளார்.
ஒரு புறம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஓட்டு கட்சிகள் அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், மறத்தமிழன் முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்திற்கு பிறகு உணர்வுப்பூர்வமான எழுச்சி தமிழகத்தில் தலையெடுத்தது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மிகப்பெரும் எழுச்சியை தமிழக மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் சென்றனர். இதில் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அனைத்து கல்லூரிகள் மற்றும் விடுதிகளையும் இழுத்து மூடி அவர்களின் உணர்வுகளை ஒட்டு மொத்தமாக பொசுக்கியது கலைஞர் அரசு.
அடுத்தபடியாக வழக்கறிஞர்கள், இவர்களை நேரடியாக எதிர்கொள்ள துணிவில்லாமல், காவல் துறையினரை கொண்டு இவர்கள் மேல் கண்மூடித்தனமான இரக்கமற்ற அரக்கத் தாக்குதலை நடத்தி போராட்டத்தை திசை திருப்பியது கலைஞர் அரசு. ஆனால் அவர்கள் ஒற்றுமையாக இருந்து தவறு செய்த காவல் துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாளொரு போராட்டமும் பொழுதொரு ஆர்ப்பாட்டமாக இருக்கையில், இவர்களின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் தி.மு.க வின் வழக்கறிஞர்களை தனித்து இயங்கச் செய்தது கலைஞரின் ராஜதந்திரம்.
இந்திய இறையாண்மை பற்றி பேசும் தி.மு.க அரசு தனித்தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தமிழகத்தில் தலையெடுத்து ஆட்சியையும் பிடித்தது மறந்து விட்டதா ? அல்லது தனது கூட்டணி சகாவான காங்கிரசை திருப்திபடுத்த எடுத்த நடவடிக்கையா ?

கலைஞர் அவர்களே உங்களின் கைது படலத்தை தொடருங்கள், வை.கோ, இராமதாஸ், தா.பாண்டியன் , திருமா, நெடுமாறன், ஏன் அண்மைக்காலமாக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தும் ஜெ மட்டுமல்லாது, ஈழத்தமிழர்களுக்கு விடிவு பிறக்காதா, அவர்களின் வாழ்வு சிறக்காதா என ஏங்கித் தவிக்கும் அப்பாவி தமிழர்களையும் உங்கள் கைதுக்கணக்கில் வரவு வையுங்கள். தன்னலமின்றி மற்றவருக்காக (உங்களுக்காகவும்தான்) சிறை சென்ற தமிழினம் தன் தொப்புள் கொடி உறவுக்காக சிறை செல்லவும் தயார். உயிர் மூச்சில் ஈழ உணர்வுகளை சுமந்திருக்கும் ஒட்டுமொத்த தமிழனையும் கைது செய்து விட்டால், சுயம் இழந்து தன்மானம் துறந்து தலைவனின் திருவாய் மொழியே வேதவாக்காக நினைக்கும் உடன்பிறப்புகளும், சூடு சொரனையற்ற, உளுத்துப்போன காங்கிரஸ்சின் தூண்களும் உங்கள் கூட்டணியை எதிர்ப்பவர் யாருமின்றி வெற்றி வாகை சூட வைப்பார்கள்.



வாழ்க தமிழினம் ...! வளர்க தமிழ் மொழி ...!

Wednesday, March 4, 2009

ஒபாமா, கார்டன் பிரவுன் சந்திப்பு, ஐ.பி.எல் போட்டிகள் தள்ளிவைப்பு....

தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், தேசிய அளவில் யார் யாருடன் கூட்டணி அமைக்கிறார்கள், அவர்களுடன் மாநில அளவிலான கூட்டணி எவை, அந்த கூட்டணி தேர்தலுக்கான சீட்டு பேர கூட்டணியா, இல்லை கொள்கை உடன்பாடு கூட்டணியா என என்னைப்போன்ற சாமானியர்கள் பத்திரிக்கை மற்றும் தொல்லைகாட்சியை பார்த்து, விழி பிதுங்கி நிற்கின்ற சூழலில்....
ஏப்ரல் 10 இல் தொடங்குவதாக இருந்த ஐ.பி.எல். போட்டி அட்டவணையை மாற்ற வேண்டும் , 20-20 போட்டிகளின் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்ய உள்ளது, 20-20 போட்டிகளுக்கும், தேர்தல் பாதுகாப்புக்கும் துணை பாதுகாப்பு படையை பயன்படுத்துவது சாத்தியமில்லாதது ஆகும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.



ICC செயலர் லார்கெட், பாகிஸ்தான் பாதுகாப்பு இல்லாத நாடு, அங்கு சர்வதேச போட்டிகள் நடைபெறுவது சந்தேகத்திற்கு இடமானது என கூறிஉள்ளார். நியூசிலாந்தும் தனது பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்துள்ளது.







பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தனது வீரர்கள் விளையாட பாதுகாப்பான பகுதி என நினைத்த இலங்கை முகத்தில் கரியை பூசியது பாகிஸ்தான் என இந்திய கிரிகெட் தேர்வு குழுவின் முன்னாள் தலைவர் கிரண் மோரே கூறிஉள்ளார்.
இலங்கை விளையாட்டு வீரர்கள் மீதான தாக்குதலில், பாகிஸ்தான் இராணுவம் பின்னணியில் இருப்பதாக இந்திய உளவுத்துறை அறிவிப்பு.
கிரிகெட் போட்டிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளது, வாக்கு பதிவு நடைபெறும் நாட்களில் போட்டிகள் ஏதுமில்லை, ஆகையால் அட்டவணையை மாற்ற தேவையில்லை என்று வாரியத் தலைவர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.



தீவிரவாதிகளின் இலக்கு சர்வதேச மட்டைபந்து வீரர்களின் பக்கம் திரும்பி இருப்பதாகவும், லாகூர் தாக்குதலுக்கு பிறகு, தீவிரவாதிகளின் இலக்கு பாகிஸ்தானில் மட்டுமல்ல, துணைகண்டத்திலும் தொடரலாம் என அஞ்சுவதாக சர்வதேச வீரர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் தீவிரவாதிகளின் இருப்பிடமாக இருக்க கூடாது என்பதில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் கவனமாக இருப்பதாகவும், அது கடந்த காலங்களில் பெருத்த ஏமாற்றத்தை அளித்ததாகவும் ஒபாமா மற்றும் கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளனர், மேலும் உலக பொருளாதார வீழ்ச்சியை எதிர்த்து போராட உலகளாவிய ஆதரவை பெற முயற்சி மேற்கொள்ள போவதாகவும் அறிவித்துள்ளனர்.



ஐயோ ஐயோ ஐயோ ... ஒன்னுமே புரியல. ஒட்டு மொத்த உணர்வுகளையும் இழந்து இவர்கள் ஏதாவது செய்வார்கள் என ஏமாந்து காத்திருக்கும் தமிழனுக்கு கிடைப்பது இது போன்ற செய்திகள்தான். ஈழம் எங்கே....?

Tuesday, March 3, 2009

பாகிஸ்தானிலும் வெள்ளை வேன்....


பாகிஸ்தான், லாகூரில் உள்ள கடாபிஃ விளையாட்டு மைதானம் அருகே இன்று காலை இலங்கை மட்டைபந்து வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

இன்று காலை இலங்கை மட்டைபந்து வீரர்கள் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க கடாபிஃ விளையாட்டு மைதானம் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. சுமார் 12 க்கும் மேற்ப்பட்ட தீவிரவாதிகள், இலங்கை வீரர்களையும், பாதுகாப்பு படை வீரர்களையும் நோக்கி வெடிகுண்டுகளையும் வீசயுள்ளனர், இதில் இலங்கை வீரர்கள் எட்டு பேர் காயமடைந்ததாகவும், நான்கு வீரர்கள் பலத்த காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். இலங்கை அணியுள் உள்ள தமிழரான முத்தையா முரளிதரன் காயம் ஏதுமின்றி தப்பியுள்ளார். இந்த சண்டையில் ஐந்து பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர் , மூன்று பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கடும் சண்டை சுமார் அறை மணி நேரம் நீடித்ததாக தெரிகிறது. தீவிரவாதிகள் அனைவரும் வெள்ளை நிற காரில் வந்ததாகவும் கூறப்படுவது முக்கியச்செய்தியாகும்.

Thursday, February 26, 2009

இந்தியாவின் மனித உரிமை போராளிகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் ....

"ஈழ தமிழர் தோழமை குரல் "அமைப்பின் ஒருங்கிணைபாளர்களில் ஒருவரான லீனாமணிமேகலை சமீபத்தில் டெல்லி சென்று ஈழ தமிழர்களை காப்பாற்ற கோரி தேசிய அளவிலும் , சர்வதேச அளவிலும் ஆதரவு கேட்டு நாடாளுமன்றம் எதிரே போராட்டம் நடத்தி தமிழகம் திரும்பியிருக்கிறார்.


இவர் அங்கு நடந்த சம்பவங்களை பட்டியலிடுகையில், நாம் இலங்கையில் நடைபெற்று வரும் இனபடுகொலையை , ஈழ பிரச்சினையை தேசிய உடகங்களிலோ, தேசிய அளவிலான மனித உரிமை போராட்ட குழுக்களிடமோ சரிவர கொண்டு சேர்க்கவில்லையோ என்ற எண்ணமே ஏர்படுகிறது, அல்லது இந்தியாவின் இறையாண்மையை காரணம் காட்டி இவர்கள் ஒதுங்குகிறர்களோ என்று எண்ணவும் தோன்றுகிறது. தேசிய அளவிலான செய்தி மற்றும் காட்சி உடகங்களை பற்றி நாம் சிறிதளவேனும் கவலைப்பட வேண்டாம் . அவர்களின் நிலைபாட்டில் இருந்து இன்றளவும் மாறுபடாமல் இலங்கையின் பிரதிநிதிகளாகவே நடந்து கொள்கின்றனர் , இதன் மூலம் அவர்களின் கல்லாவையும் நிரப்பிகொள்கின்றனர். ஆனால் தேசிய அளவிலான மனித உரிமை போராளிகளும் இப்படித்தான் என என்னும் பொது அதிர்ச்சியடைய செய்கிறது.
இனி லீலா மணிமேகலை அவர்களின் வார்த்தைகளாக வந்த பத்திரிக்கை செய்தியிலிருந்து சில ....

பிரணாப் முகர்ஜியிடம் கெஞ்சவா நாற்பது எம்.பிக்களை டெல்லிக்கு அனுப்பிவைத்தோம் , இலங்கையின் இனபடுகொலையை தேசிய அளவில் கூட விவாதிக்க படவில்லையே என்ற ஆதங்கத்தினால்தான் நாடாளுமன்றம் முன்பு ஆர்பாட்டம் நடத்த சென்றோம் . அருகிலேயே மேதாபட்கர் , அருந்ததி ராய் போன்ற மனித உரிமை போராளிகள் இருக்கிறார்கள் . அவர்கள் ஈழத்தில் நடக்கும் இனபடுகொலையை பற்றி முழக்கமிடுவார்கள் என நம்பினோம். ஆனால் அவர்களின் நிஜ முகத்தை இப்போதுதான் புரிந்து கொண்டோம்.





எங்களுக்கு அருகில் "நிலங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் " தலைவி மேதா பட்கர் "ஆதிவாசி மக்களின் வாழ்விடம் பாதுகக்கபடவேண்டும் " என்று வலியுறுத்தி கொண்டிருந்தார், அவரிடம் சென்று ஈழ தமிழர்களின் வாழ்விடங்களும் பாதுகாக்கப்படவேண்டும் என நீங்கள் பேசினால் அது உடகங்கள் மூலமாக உலகை சென்றடையும் என வற்புறுத்தினோம். அதற்க்கு அவர் "அவர்கள் எல்லோரும் விடுதலைபுலிகள், அவர்கள் இந்தியாவில் இருந்து சென்ற மலையக தமிழர்களை விரட்டியடித்தார்கள் "அவர்களுக்கு ஆதரவாக நான் குரல் கொடுக்க முடியாது என மறுத்து விட்டார்.


. இராக் பிரச்சினையில் தலையிட அமெரிக்காவுக்கு அதிகாரமில்லை, இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.


"காஷ்மீர் என்பது அப்பகுதி மக்களுக்குத்தான் சொந்தம், இந்தியாவும், பாகிஸ்தானும் அங்கிருந்து வெளியேற வேண்டும் "
என்று துணிச்சலாக போராடி கொண்டிருக்கிற அருந்ததிராய்யிடம் சென்று அழைத்த போது மௌனமே பதிலாக தந்தார்.
3. நாங்கள் அரசியல் ஆதரவு கேட்டு பகுஜன் சமாஜ் கட்சியை அணுகினோம், அவர்களோ புலிகள் , தலித்களுக்கு எதிரானவர்கள், அவர்களுக்கு ஆதரவு தரமாட்டோம் " என்றனர்.
4. சில முஸ்லீம் அமைப்புகளிடம் கேட்டோம் , "புலிகள் , முஸ்லிம்களை கொன்றவர்கள், அவர்களை தமிழர் பகுதியிலிருந்து விரட்டியடிதவர்கள் , எனவே ஆதரவு தர மாட்டோம் " என்றனர்.
5. அமீர்கான் மொட்டை அடித்ததையும், மங்களூர் மதுபான விடுதியில் பெண்கள் தாக்கப்பட்டதையும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒளிபரப்பிய என்.டி.டிவி, ஆஜ்தக் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விடுத்த அழைப்பும் வீண்தான். ஐந்து நட்சத்திர விடுதிகளில் குண்டு வெடித்த போது, செல்வச்சீமான்கள் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக மாற்றினார்கள் , ஆனால் இலங்கை அரசின் கொத்து குண்டுகளுக்கு செத்து மடியும் தமிழர்களுக்காக பேச மறுக்கிறார்கள்.

"ஈழ தமிழர்களும் மனிதர்கள்தான் என்பதை இந்திய மனித உரிமை மஹாத்மாக்கள் எப்போது உணர போகிறார்களோ" என்று வேதனையோடு குறிப்பிடுகின்றார்.
இது இப்படி இருக்கையில் "ஈழ தமிழர் தோழமை குரல் " என்ற பெயரில் மற்றொரு பிரிவினரும் ஆர்பாட்டம், போராட்டம் என்று தம் " வலிமையை ' காட்டி வருகின்றனர்.
இதையெல்லாம் பார்க்கும்போது , இங்குள்ள அரசியல்வாதிகள் தம் சுய லாபத்திற்க்காக (ஒரு சிலரை தவிர ) தமிழர்களை வைத்து ஓட்டு வியாபாரம் செய்கிறார்கள் என்றால் மிகையாகாது. அதுபோல இங்கிருக்கும் மனித உரிமை போராளிகள் ( தங்களை அப்படி வெளிப்படுத்தி கொள்பவர்கள் ) இந்திய அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, இந்திய அரசின் சலுகைகளை முழுமையாக பெற்றுக்கொண்டு, இந்திய அரசுக்கு எதிராக போராடுபவர்கள் என்பதே உண்மையாகும்.
தேசிய, சர்வதேச ஊடகங்களை நம் பக்கம் திருப்ப, உணர்வுள்ள தமிழர்கள் ஒட்டுமொத்த தலைமையின் கீழ் ஓரணியாக திரண்டு போராடினால் மட்டுமே இது சாத்தியமாகும். நாம் நமது எதிர்ப்பை நமக்குள்ளேயே பகிர்ந்து, உயிரை மாய்த்து கொள்ளாமல், மனிதசங்கிலி, பொதுக்கூட்டம், ஊர்வலம் என வழக்கமான நடைமுறைக்கு வெளியே வந்து, நமது முழுமையான எதிர்ப்பை இந்திய அரசாங்கத்தின் பக்கம் திருப்பினால், இந்தியாவை மட்டுமன்றி சர்வதேசத்தையும் நம் பக்கம் திருப்ப முடியுமே.

"உங்களுக்கு ஒவ்வொறு முறையும் அதிர்ஷ்டம் வர வேண்டும்
எங்களுக்கு அதிர்ஷ்டம் ஒருமுறை வாய்த்தால் போதும் "
ஒரு போராளி சொன்னது.

இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. நம் கண்மணிகள், ரத்தத்தின் ரத்தங்கள், உடன்பிறப்புகள் எல்லாவற்றையும் மறந்து, ஓடியாடி தேர்தல் வேலை செய்யவேண்டாமா. அதற்க்காக இப்போதே ஓட்டு கட்சிகள் முழு முனைப்புடன் செயல்பட தொடங்கியுள்ளன.
நாம் நம் ஒற்றுமையின் மூலம் இவர்களுக்கு பாடம் கர்பிப்போமா.

Wednesday, February 25, 2009

ராணுவ அதிகரி பலி....

வங்கதேசத்தில் புரட்சியா ....

இன்று காலை வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் எல்லை பாதுகாப்பு படையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பில்கானா பகுதயில் கடும் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது .
வங்கதேச ரைபிள்ஸ் படை வீரர்களின் சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகள் சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்த வந்த அதிகாரிகளை , வீரர்கள் சிறைபிடித்து அறைக்குள் அடைத்து வைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் , இதனையடுத்து இராணுவம் அங்கு குவிக்கப்பட்டு அதிகாரிகளை விடுவிக்குமாறு கேட்டுள்ளனர், அதனை அவர்கள் மறுத்ததோடு அல்லாமல் ரகளையில் ஈடுபட்டு அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் மேஜர் ஜெனரல் ஒருவரும், அதிகாரிகள் பலரும் உயரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Monday, February 9, 2009

குற்றவாளிகள் அதிகரிக்க ஒரு சட்டம் ...

குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தில் தற்போது பிரிவு 41,309 ஆகியவற்றில் கொலை முயற்சி , கொள்ளை , திருட்டு , கற்பழிப்பு முயற்சி , போலி பாஸ்போர்ட் , கள்ள நோட்டு அச்சடிப்பு , மோசடி உள்ளிட்ட வழக்குகளில 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் .

இப்படி இருக்கும் சூழலில் தினசரி பத்திரிகையிலிருந்து வார மாத இதழ்கள் வரை , நிஜம் முதல் குற்றம் நடந்தது என்ன வரை , ஊடகங்களில் பார்த்து பார்த்து மக்கள் மனம் வெதும்பி நிற்கின்றனர் . ஒரு சில குற்றவாளிகள் செய்திகளை பார்த்துதான் இது போன்ற குற்றங்களை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர் .

குற்றவாளிகளை காவல் துறையினர் முறைப்படி விசாரித்துதான் , குற்றம் யாரால் , எவருடைய துணையுடன் , எந்த இடத்தில் எப்படி நடந்தது என்பதை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கி தருகிறார்கள் .

இங்கு பாராளுமன்றத்துக்கே பாதுகாப்பு இல்லை , தொடர்வண்டி நிலையங்கள் , பேருந்து நிலையங்கள் , கோவில்கள் போன்ற பொது இடங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.காவல் துறையினர் இது போன்ற இடங்களை கண்காணித்து சந்தேக படுபவர்களை விசாரித்து அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு பாதுகாப்பதற்கு நம் குற்ற நடவடிக்கை சட்டங்களே காரணமாகும்.

ஆனால் நடுவண் அரசோ எதை பற்றியும் கவலைபடாமல் குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தை திருத்தி மேற்கண்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்யாமல் விசாரித்து , தேவைபட்டால் மட்டுமே கைது செய்யலாம் என மாற்றியுள்ளது . இது குற்றவாளிகளையும் அவர்கள் செய்யும் குற்றங்களையும் அதிகரிக்கவே செய்யும். எனவே நடுவண் அரசு புதிய சட்ட திருத்தத்தை அமல்படுத்தாமல் திரும்ப பெறுமா. காத்திருப்போம் .

Thursday, February 5, 2009

சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு ....

இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா. பாண்டியன் அறிவித்துள்ளார். இவர் சமீப காலமாக முன்னெடுத்து வரும் போராட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில்,தமிழக தலைவர்கள் தலைமையில் பொது மக்கள் மற்றும் அனைத்து தரப்பினர் ஒத்துழைப்புடன் அனைத்து போராட்டங்களும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போது அவர் மனித உரிமை அமைப்புகளுடன் கலந்து பேசி அவர்களின் துணையோடு நல்ல வழக்கறிஞரை கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஐயா தா. பாண்டியன் அவர்களே நல்ல வழக்கறிஞரை எங்கே தேடுவது என்ற மனக்கலக்கம் தங்களுக்கு சிறிதளவேனும் இருக்குமல்லவா. அவரை நீங்கள் ஏன் தேடி செல்ல வேண்டும். நம் கலைஞர் ஐயா அவர்கள் இலங்கை தமிழர் நல உரிமை அமைப்பு ஒன்றை, தமிழர் தலைவர் வீரமணி , சட்ட அமைச்சர் துரைமுருகன் ,கவிஞர் கனிமொழி, ஸ்பெக்ட்ரம் புகழ் ராசா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஐ கொண்டு உருவாக்கி அவர்களை பல்வேறு நாடுகளுடன் தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் செய்ய ஏறப்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்களே. அதில் சட்ட அமைச்சரும் சட்ட வல்லுனர்களும் இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா , காங்கிரஸின் சட்ட மன்ற உறுப்பினர், ராஜிவ்காந்தியின் நண்பருமான, பிரபாகரனுக்கு ராஜிவ்காந்தியிடம் கைகெடிகாரம் வாங்கி தந்த வழக்கறிஞர் பீட்டர் அல்போன்ஸை மறந்து விட்டீர்களா அல்லது தற்போது தேர்தல் நெருங்குவதால் தமிழர்களின் நினைப்பு வந்து இலங்கை அரசு தாக்குதலை நிறுத்த வேண்டும், விடுதலைபுலிகள் வன்முறையை கைவிட வேண்டும் , இருவரும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்த முன்வரவேண்டும் என்றெல்லாம் கூறி மெய்சிலிர்க்க வைத்த மத்திய உள்துறை அமைச்சர் . சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் அவர்களையும் மறந்துவிட்டீர்களா.
இவர்கலெல்லாம் இருக்கிறார்கள் என்பதை மறந்தது மட்டுமல்லாது, இருபத்தைந்து வருடங்களாக ஈழ தமிழர்களுக்காக போராடிய தமிழ் ஈன தலைவர் (கீ போர்டில் இ விழ மாடேங்குது ) கலைஞரை மறந்தது உங்களுக்கும் அம்நிஷியா இருக்குமோ என்று (சமீபத்தில் உங்கள் மேல் பட்ட காற்று) எண்ணத் தோன்றுகிறது.