திண்டுக்கல் நகரில் கடந்த 2 ம் தேதி, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்க்காக பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறது தமிழக காவல் துறை. இதர்க்கு இவர்கள் சொல்லும் காரணம், கொளத்தூர் மணி இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகவும் பேசியது, ராஜிவ் கொலையை விமரிசித்தது.
இயக்குனர் சீமானை தொடர்ந்து கொளத்தூர் மணி கைது செய்யப்பட்ட நிலையில், மார்ச் 1 ம் தேதி திருப்பூரில் "நாதியற்றவனா ஈழத்தமிழன்" என்ற தலைப்பில் பேசிய ம.தி.மு.க வின் கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத்தும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்படி இவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவர்களை எல்லாம் கைது செய்து வரும் நேரத்தில், ஈழத்தமிழர்களுக்காக இவர் எழுதிய கவிதைகளும், இவர் பேசியவையும் நினைவில் வருகிறது.
சோனியாவை விமரிசிப்பவர்களுக்கு தங்கள் கூட்டணியில் இடமில்லை என கூறி வரும் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஈழத்தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரிக்க போவதாகவும், அதனை செஞ்சுலுவை சங்கம் மூலம் இலங்கைக்கு அனுப்ப போவதாகவும் கூறியுள்ளார், இதனைப்பற்றி, கொட்டாவி விடுவதற்க்காக கூட வாய் திறக்காத தமிழின தலைவர் கலைஞர் அவர்கள், செல்வி ஜெயலலிதாவின் புதிய பரிமாண வளர்ச்சியாக ஈழத்தமிழர் பிரச்சினையை கையிலெடுத்து, உண்ணாவிரத போராட்டம் முதல் உண்டியல் குலுக்கியது வரை, பத்தி பத்தியாக விமரிசித்தது மட்டுமின்றி இவர்கள் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் இவற்றை அனுப்ப முடியாது என கூறியுள்ளார்.
ஒரு புறம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஓட்டு கட்சிகள் அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், மறத்தமிழன் முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்திற்கு பிறகு உணர்வுப்பூர்வமான எழுச்சி தமிழகத்தில் தலையெடுத்தது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மிகப்பெரும் எழுச்சியை தமிழக மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் சென்றனர். இதில் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அனைத்து கல்லூரிகள் மற்றும் விடுதிகளையும் இழுத்து மூடி அவர்களின் உணர்வுகளை ஒட்டு மொத்தமாக பொசுக்கியது கலைஞர் அரசு.
அடுத்தபடியாக வழக்கறிஞர்கள், இவர்களை நேரடியாக எதிர்கொள்ள துணிவில்லாமல், காவல் துறையினரை கொண்டு இவர்கள் மேல் கண்மூடித்தனமான இரக்கமற்ற அரக்கத் தாக்குதலை நடத்தி போராட்டத்தை திசை திருப்பியது கலைஞர் அரசு. ஆனால் அவர்கள் ஒற்றுமையாக இருந்து தவறு செய்த காவல் துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாளொரு போராட்டமும் பொழுதொரு ஆர்ப்பாட்டமாக இருக்கையில், இவர்களின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் தி.மு.க வின் வழக்கறிஞர்களை தனித்து இயங்கச் செய்தது கலைஞரின் ராஜதந்திரம்.
இந்திய இறையாண்மை பற்றி பேசும் தி.மு.க அரசு தனித்தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தமிழகத்தில் தலையெடுத்து ஆட்சியையும் பிடித்தது மறந்து விட்டதா ? அல்லது தனது கூட்டணி சகாவான காங்கிரசை திருப்திபடுத்த எடுத்த நடவடிக்கையா ?
கலைஞர் அவர்களே உங்களின் கைது படலத்தை தொடருங்கள், வை.கோ, இராமதாஸ், தா.பாண்டியன் , திருமா, நெடுமாறன், ஏன் அண்மைக்காலமாக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தும் ஜெ மட்டுமல்லாது, ஈழத்தமிழர்களுக்கு விடிவு பிறக்காதா, அவர்களின் வாழ்வு சிறக்காதா என ஏங்கித் தவிக்கும் அப்பாவி தமிழர்களையும் உங்கள் கைதுக்கணக்கில் வரவு வையுங்கள். தன்னலமின்றி மற்றவருக்காக (உங்களுக்காகவும்தான்) சிறை சென்ற தமிழினம் தன் தொப்புள் கொடி உறவுக்காக சிறை செல்லவும் தயார். உயிர் மூச்சில் ஈழ உணர்வுகளை சுமந்திருக்கும் ஒட்டுமொத்த தமிழனையும் கைது செய்து விட்டால், சுயம் இழந்து தன்மானம் துறந்து தலைவனின் திருவாய் மொழியே வேதவாக்காக நினைக்கும் உடன்பிறப்புகளும், சூடு சொரனையற்ற, உளுத்துப்போன காங்கிரஸ்சின் தூண்களும் உங்கள் கூட்டணியை எதிர்ப்பவர் யாருமின்றி வெற்றி வாகை சூட வைப்பார்கள்.
வாழ்க தமிழினம் ...! வளர்க தமிழ் மொழி ...!
0 கருத்துரை(கள்):
Post a Comment