Tuesday, May 19, 2009


நாம் எதிர்பார்த்தது நடந்தேறிவிட்டது, ஆம் அப்பாவி தமிழனின் வாய்க்கரிசியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி புதிய ஆட்சி அமைக்க உள்ளது.ஆட்சியமைக்கும் முன்னரே ராஜபக்சேவின் ஊது குழலாக இருக்கும் பிரணாப்முகர்ஜி கூறியதாக இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் விடுத்த செய்தியில் ஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே தலைவன், வீர மறவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக தெரிவிக்கிறார்.இலங்கை தூதரோ 100 கோடி ரூபாய் வழங்கிய பாரத பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், சில கோடிகளை வழங்கிய தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.


இந்நிலையில் பிரபாகரன் இறந்தது உண்மை எனவும் 30 ஆண்டுகால விடுதலைப்புலிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்தது எனவும் இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகும், தமிழனின் சமாதியின் மேல் தனது மகனுக்கும் மற்றவர்களுக்கும் மத்திய மந்திரி என்ற மகுடம் சூட தில்லிக்கு செல்ல இருக்கும் தமிழின தலைவர், தன்மான சிங்கம், சொக்கத்தங்கம் சோனியாவிடம் தமிழகத்தை, தமிழினத்தை அடகு வைத்த அன்பு தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கருத்து ஏதும் சொல்லமாட்டாரம்.


ஏ தமிழின துரோகிகளே, கடந்த காலங்களில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரத் தமிழர்களின் ஆன்மாக்களிலும், ஆறரை கோடி தமிழக தமிழர்கள் மற்றும் லட்சோப லட்ச உலகத்தமிழர்களின் ஒவ்வொரு இரத்த அணுக்களிலும் கலந்து ஒன்றாகி விட்ட வேலுப்பிள்ளை பிரபாகரனை, தமிழர்களின் தலைவனை, தமிழினத்தின் வெற்றி வீரனை உங்களால் கொல்ல முடியாது. ஆனால் அங்கு கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களுக்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும். இன்று இலங்கையின் பொய் பிரச்சாரத்தை வெகு வேகமாக வெளியுலகிற்கு அறிவிக்கும் இந்திய அரசு நிச்சயம் ஒரு நாள் சர்வதேச சமூகத்தின் முன் கை கட்டி குற்றவாளியாக நிற்கப்போவது உண்மை.... உண்மை....உண்மை....

0 கருத்துரை(கள்):