இங்கிலாந்து தலைநகர் இலண்டன் மாநகரில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான தமிழர்கள் மில்பேங்க் என்ற இடத்தில் இருந்து பாரளுமன்றம் வழியாக டெம்பிள் பிளேஸ் என்னும் இடம் வரை பேரணியாக அணி வகுத்து தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டி முழக்கமிட்டனர். இனப்படுகொலைக்கான கண்டனத்தையும் போரை நிறுத்தவேண்டியும் அனைவரும் கையொப்பமிட்டு, அந்நாட்டு பிரதமர் கார்டன் பிரவுனுக்கு மனு கொடுத்து மன்றாடி கேட்டனர்.
கனடாவின் டொராண்டோ, ஒட்டாவா, மாண்ட்ரியல், வான்கோவா ஆகிய நகரங்களில் 50 ஆயிரத்திற்கும் மேலான தமிழர்கள் 15 கி.மீ. தொலைவுக்கு மனித சங்கிலியாக கைகோர்த்து போரை நிறுத்து, பேச்சை தொடங்கு என ஆர்பரித்து நின்றார்கள். கனடா வாழ் தமிழர்களின் மன வலிமையை புரிந்து கொண்டதாகவும், உணர்வுகளை மதிப்பதாகவும் இது குறித்து அமைச்சரவையில் விவாதித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று அந்நாட்டு அமைச்சர் நடாளுமன்றத்திலேயே உறுதியளித்தார்.
பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிசில் எக்கோல் மிலித்தர் என்ற இடத்தில் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள முக்கியமான பகுதியில் ஐம்பதாயிரம் தமிழர்கள் கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடத்தி இனப்படுகொலையை நிறுத்துக என விண்ணதிர முழங்கினார்கள். சமூக ஆர்வலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற பிரமுகர்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள் என பலரும் இணைந்து ஈழத்தமிழர்களுக்காக பரிந்து பேசிய இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன்வோன்கோக் அவர்களும் ஆதரித்து உரையாற்றினார்.
ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஐ.நா. அலுவலகம் நோக்கி, தமிழர் பேரவையின் சார்பில் தமிழர்கள் ஒருங்கிணைந்து அழிவிலும் எழுவோம் என்ற குறியீட்டு பெயருடன் பேரணி நடத்தினார்கள். இலங்கையின் விடுதலை நாளான பிப்ரவரி 4 ஆம் தேதியை தமிழர் வாழ்வின் துயர நாளாக பிரகடனம் செய்த அவர்கள், சிங்களக்கொடியை எரித்தும் போர் நிறுத்தத்தை வலியுறித்தியும் ஆவேசமாக குரல் எழுப்பினார்கள். 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டு வந்து மனித நேயம் காக்க களத்தில் நின்றதை அந்நாட்டு ஊடகங்கள் வியந்து நின்றன.
தென்னாபிரிக்காவில் டர்பன் நகரில், தமிழர் கூட்டமைப்பு, இஸ்லாமிய ஒன்றியம், தேசிய காங்கிரஸ், கம்யுனிஸ்ட் கட்சி, சிறுபான்மை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்திய வம்சாவளியினர் முவாயிரம் மக்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சகத்திடம் கண்டன மனுவை ஒப்படைத்து தமது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினர்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் நிலை குறித்து 90 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது. வெளியுறவு, காமன்வெல்த் அலுவல் துறை அமைச்சர் பில்ரம்மெல், இலங்கை பிரச்சினை மிகவும் அதிர்ச்சியை நமக்கு அளிக்கிறது. அங்கு நிலவும் மனித உரிமை மீறல் குறித்து கவலை கொள்கிறோம். மனித உரிமை நிலைகள் மிகவும் சீர்குலைந்துவிட்டன. பெண்களும், குழந்தைகளும், ஏதுமறியா மக்களும் அங்கு கொல்லப்படுகிறார்கள். இவை அனைத்தும் அனைத்து நாடுகளின் மனிதாபிமான சட்டத்திற்கு புறம்பானவை. இலங்கை அரசின் மருத்துவமனைகளின் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் எந்த முயற்சியும் நம்மால் ஒப்புக்கொள்ள முடியாதவை. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என கவலையுடன் உரையாற்றினார்.
ஜெரமிகார்பன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை அரசு போரை நிறுத்திட முன்வரவில்லை என்றால், காமன்வெல்த் அமைப்பில் இருந்து அதனை நீக்க வேண்டும். ராணுவ வணிக ஒப்பந்தங்களிலிருந்து துண்டிக்க வேண்டும் என்று ஆவேசம் பொங்கிட உரையாற்றினார்.
தென் ஆப்பிரிக்காவில் ஆம்ஸ்டர்டாம் நகரில் கடந்த பிப்ரவரி 21 முதல் 25 வரை ஐந்து கண்டங்களிலிருந்து 50 கட்சிகள் அடங்கிய " போர்ட் இன்டர்நேஷனல் " என்ற உழைப்பாளர்களின் பன்னாட்டு அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. மெக்சிகோ, ஜப்பான் , ஜெர்மனி , இங்கிலாந்து , இத்தாலி , தென் ஆப்பிரிக்கா , பிலிப்பைன்ஸ் , பிரேசில் , போர்ச்சுகல் , கிரீஸ் , அல்ஜீரியா , டென்மார்க் ஆகிய நாடுகளின் போராளிகள் ஒன்றுகூடி இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தி , தமிழர்கள் வாழும் பகுதியில் தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய அரசை அமைக்க பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும் என்று அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது .
கத்தோலிக்க கிறித்துவ மதத்தலைவர் போப்பாண்டவரும், வாடிகன் நகரில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது மோசமடைந்து வரும் மனித அவலங்களையும், கொல்லப்படும் மனிதர்களின் எண்ணிக்கையும் பார்த்து போரை நிறுத்தி சமாதானத்தை உருவாக்க முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் .
இலங்கையில் நடக்கும் மோதல்கள் மீதும், வேதனையில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் பேரிடர் குறித்தும் உலகின் கவனம் திரும்பவேண்டும் என்றும் முன்னாள் மனித நேய உதவி அலுவலர்களுக்கான ஐ.நா. பொதுச்செயலாளரும், நெருக்கடிக்கால இடர் நீக்க உதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளருமான ஜேன் ரிஜிலான்ட் அவர்கள் நார்வே நாட்டிலிருந்து கேட்டுககொண்டார். அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கோரிக்கைகளை முன்வைத்து அமைதியை நிலைநாட்ட ஆவன செய்து வருகிறார்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கான சிறப்புத் தூதரை அனுப்பிவைப்பதாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் அறிவிக்கிறார். நாம் மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும் கடந்த பத்து நாட்களில் நடைபெற்றன. உலகமே கலங்கித் தவித்த வேளையில் நம் பாரதத்திரு நாடு சிங்களவனின் பங்காளியாய் நின்று நமக்கு பகையாளியாய்ப் படை நடத்திவருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் மனித உரிமை மீறலை விசாரிக்கவும் விவாதிக்கவும் வலியுறுத்தி சுவிட்சர்லாந்து, நியுசிலாந்து ஆகிய நாடுகள் தீர்மானங்களை கொண்டு வந்தபோது, இலங்கையுடன் இணைந்து இந்தியாவும் விவாதிக்கக்கூடாது என சண்டித்தனம் செய்து ஜனநாயகக் குரல்வளையை நெரிததுக்கொன்றது. தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய போர்நிறுத்த தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்த டெல்லி அரசு, என்.என்.ஜா., கே.பி.எஸ்.மேனன் ஆகிய அதிகாரிகளையும், காங்கிரசின் வெளியுறவு பிரிவு இணைச்செயலாளர் ஆகியோரையும் கொழும்புக்கு அனுப்பி போரை தொடரச் சொல்கிறது. தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகள் கூறுவதை இந்தியா ஒருபோதும் காதில் வாங்காது என்று இலங்கையின் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா திமிருடன் பேசியது காங்கிரசின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை.
விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய இந்தியா அரசு, தமிழீழ விடுதலைப்போரை நசுக்குவதற்காக, சிங்களக் காடையர்களுக்கு ஆயுதங்களையும், ஆள்களையும், பணத்தையும், தொழில்நுட்ப பொறியாளர்கள் உதவியையும் வாரி வழங்குகிறது. கிளிநொச்சியை, ஆனையிறவை, முல்லைத்தீவை வலுக்கட்டாயமாக பறித்து பஞ்சைகளாய், பராரிகளாய் தவித்து நிற்கும் தமிழீழ மக்களை கொன்றழிக்கும் சிங்களரின் கொலை பாதகச் செயலுக்கு இந்தியக் காங்கிரஸ் அரசு துணை போகிறது.
இந்திய வானூர்திகள், வானூர்தி ஓட்டுனர்கள், போர்ப்படைத் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள், பிரதமர் மன்மோகன் சிங், அயலுறவுச் செயலாளர் சிவசங்கரமேனன் அனைவரும் ஓன்று சேர்ந்து சிங்களவரோடு தாக்குவதால் சாவை எதிர்பார்த்து தமிழீழ மக்கள் நடைபிணமாய் உலவுகிறார்கள். குண்டடிபட்டு கைகால் சிதைந்து, மருத்துவம் இன்றி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அனாதைகளாய் அல்லல்படுகிறார்கள்.
பச்சிளம் பாலகர்களும், முதியோர்களும் கொள்ளப்படவதை, தமிழ்ப்பெண்கள் கூட்டம் கூட்டமாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்படும் கொடுமையை உலக நாடுகள் எல்லாம் கண்டிக்கின்றன. ஆனால் இந்தியா, ஒருவார்த்தை கூட பேச மறுக்கிறது. போர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது எனவே புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று ராஜபக்சேயின் அடியாளைப்போல வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜி தமிழர் நெஞ்சில் ஈட்டி கொண்டு தாக்குகிறார். வஞ்சகமும் துரோகமும் இணைந்த இச்சதிக்கு கருணாநிதியின் தமிழக அரசும் கமுக்கமாக ஒப்புதல் தருகிறது.
காங்கிரஸ் - தி.மு.க. கூட்டு சதிக்கு எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். நீதி வழங்குவார்கள் என்பது உறுதி! உறுதி !
நன்றி - தடயம் ( 16 - 31 ) இதழ் .
1 கருத்துரை(கள்):
தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாட்டு இருந்திருந்தால் நமது சொந்தங்கள் படும் அவலங்கலை கண்டிக்க ஒரு நாடு இருந்திருக்குமே? அய்யோ மனம் கலங்குதப்பா. ஒவ்வொருநாலும் கவலையிலேயே எழுந்திருக்கின்றேன். எப்போது விடியும் நமது நமது ஈழத்தமிழருக்கு. தமிழ் ஈழம் மலர்ந்தாலோ?
Post a Comment